சட்டசபையை கூட்ட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் அசோக் கெலாட்க்கு தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில் மனக்கசப்பால் மோதல் உருவாகியுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டது மட்டுமில்லாமல், சபாநாயகர் பைலட் உட்பட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் கட்சிக்கு விரோதமாக செயலாற்றியதாக நோட்டீஸ் அனுப்பினார். சபாநாயகரின் நோட்டீஸை எதிர்க்கும் விதத்தில் சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். அதன்பின் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 19 எம்.எல்.ஏ.-க்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவு அசோக் கெலாட்டிற்கு பின்னடைவை கொடுத்துள்ளது.
நேற்று இரவு கவர்னரை சந்தித்து பேசுகையில் சட்டசபை கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்று முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தினார். ஆனால் என்ன நோக்கத்திற்காக சட்டசபையை கூட்ட சொல்கிறீர்கள் ? சட்டசபையை கூட்ட வேண்டுமென்றால் 21 நாட்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். கேபினட் கூட்டத்தில் சட்டசபையை கூட்டுவதற்கான நாள் இன்னும் குறிக்கப்படவில்லை, ஒப்புதலும் தரவில்லை என்பது உள்பட 6 கேள்விகளை எழுப்பிய கவர்னர், சட்டசபையை கூட்ட உத்தரவாதம் ஏதும் கொடுக்கவில்லை. இதனால் அசோக் கெலாட்க்கு ஆதரவு கொடுக்கும் எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் கவர்னர் பேச்சுவார்த்தை மேற்கொண்ட பின் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.
அப்போது அசோக் கெலாட் தற்போதுள்ள நிலைமையை எடுத்துக் கூறினார். அதன்பின் ‘‘கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்’’ என்று தெரிவித்தார். உடனடியாக கவர்னர் கேட்ட கேள்விகள் பற்றி ஆராய மீண்டும் மந்திரி சபையை கூட்டினார் அசோக் கெலாட். அப்போது அந்தக் கூட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை நோக்கமாக கொண்டு சட்டசபையை கூட்ட வலியுறுத்த முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.