கொரோனா வைரசுக்கு எதிராக அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை நான் போட்டு கொள்ள விரும்புகிறேன் என்று பிரான்ஸ் பிரதமர் ஜூன் காஸ்டெக்ஸ் கூறியுள்ளார்.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிக்கு சில ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளது. இந்நிலையில் பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29, 975 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 320 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதனால் பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,168,394ஆக உயர்ந்துள்ளது. மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கையும் 91,324-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் பிரதமர் ஜூன் காஸ்டெக்ஸ், ” தடுப்பூசி மட்டுமே கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கான ஒரே வழி. அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் மீதான நம்பிக்கை மக்களிடையே அதிகரிக்க செய்ய வேண்டும். அதற்காக நான் அந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ள விரும்புகிறேன். அந்த நிறுவன தடுப்பூசியை போட்டுக் கொண்டதால் ரத்தம் உறைகிறது என்ற புகார்கள் எழுந்துள்ளது. ஆனால் அதற்கான உரிய ஆதாரங்கள் எதுவுமே இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.