மாலத்தீவு அதிபர் கொலை முயற்சி வழக்கிற்கு அஞ்சி மாலத்தீவில் இருந்து தப்பிய முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் தூத்துக்குடி அருகே பிடிபட்டுள்ளார்.
தூத்துக்குடி துறைமுகம் அருகே சிறிய வகை கப்பல் ஒன்று சந்தகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தது. இதையடுத்து கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மத்திய மாநில உளவுத் துறை மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். பின் படகை சோதனையிட்ட அதிகாரிகள் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் 9 பேர் படகில் தங்கி இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் அவர்களில் ஒருவர் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அஹமத் அதீப் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அதீப்பிடம் காவல் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், கடந்த 2015ஆம் ஆண்டு மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீனை கொலை செய்ய முயன்றதாக அப்போதைய துணை அதிபர் முகமது அதீப் மாலத்தீவு காவல் துறையால் கைது செய்யப்பட்டு பின், அவருக்கு 39 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து மேல்முறையீட்டதால் 18 ஆண்டுகளாக சிறை தண்டனை குறைக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளாக சிறையில் இருந்த நிலையில் மாலத்தீவு உயர் நீதிமன்றம் அவரை அண்மையில் விடுதலை செய்தது. இதையடுத்து கடந்த மே மாதம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். வீட்டுக்காவல் தண்டனையும் கடந்த 28ம் தேதியுடன் முடிந்த நிலையில், தண்டனைக்கு பயந்து படகு மூலம் மாலத்தீவில் இருந்து தப்பி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.