இன்று காலை 11 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் நாடு முழுவதும் உள்ள சர்பஞ்ச்ஸுடன் (பஞ்சாயத்து அமைப்புகளுடன்) உரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 31வது நாளாக அமலில் உள்ளது. சுமார் ஒரு மாதத்தை கடந்துள்ள இந்த ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால்மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 23,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 681லிருந்து 718 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 4,325லிருந்து 4,749 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே, கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், ஏப்ரல் 27ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்துவதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றி ஆலோசனை நடக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ஊரடங்கு தொடர்பாகவும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொள்ளலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடி இதுவரை 2 முறை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தியபோது, இருமுறை ஊரடங்கு தொடர்பாக தகவல்கள் வந்தன. இந்த நிலையில் 3வது முறையாக ஆலோசனை நடத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், இன்று காலை கிடைத்த தகவலை படி, காலை 11 மணிக்கு நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து அமைப்புகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாட உள்ளார். இந்த கூட்டத்தில் இ- பஞ்சாயத்து முறைக்கான போர்டல் மற்றும் மொபைல் செயலி உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களையும் துவக்கி வைக்கிறார்.