திருமணமான 8 மாதத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் ஆத்திரம் அடைந்த கணவன் 2 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பார்வதிபுரம் நகரில் வசித்து வருபவர் கமலகாந்த் என்ஜினீயரான இவருக்கும் புள்ளம்பாடி பகுதியைச் சேர்ந்த என்ஜினீயர் ஜீவிதா என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் சிங்கப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த கமலகாந்த் திடீரென வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பினார். பின் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் இன்ஜினியர் என்பதால் மனைவியை வேலைக்கு செல்லுமாறு கணவன் வற்புறுத்தியுள்ளார்.
இவ்வாறு தகராறு முற்றவே நேற்றையதினம் மாடியில் வைத்து இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கமலகாந்த் 2 மாத கர்ப்பிணியாக இருந்த மனைவியை கத்தியால் குத்தி துடிதுடிக்க கொலை செய்துள்ளார். பின் தானும் கையை அறுத்து கொண்டு தற்கொலை செய்வது போல் நாடகம் ஆடியுள்ளார்.
இதையடுத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அக்கம்பக்கத்தினர் அனுமதித்தனர். பின் காவல் நிலையத்தில் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட விரைந்து சென்ற அதிகாரிகள் ஜீவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு கமலகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.