அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 6,750 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு புறம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் தமிழக மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையின் நடவடிக்கைகளால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தினமும் கணிசமாக அதிகரித்தே வருகிறது.
தற்போது வரை கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற 4,172 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 634 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய நிலவரப்படி அரியலூரில் 353 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கிருஷ்ணகிரியில் மொத்தம் 20 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டு பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இதையடுத்து விரைவில் கிஷ்ணகிரி மாவட்டம் பச்சை மண்டலமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பெரம்பலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 3 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.