வங்காளதேசத்தில் தொழிற்சாலை ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்காளதேசத்தின் ரூப்கஞ்ச் என்ற பகுதியில் உள்ள ஹசீம் ஜூஸ் தொழிற்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று எதிர்பாராதவிதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் பலரும் விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக மேல்தளத்தில் இருந்து கீழே குதிக்க முயற்சித்தபோது பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆலையில் ஆறு தளங்கள் இருந்தும் அவசர காலத்தில் வெளியேறுவதற்கான எந்த வழிகளும் இல்லை. இதன் காரணமாக பல ஊழியர்களும் அந்த விபத்தில் சிக்கி தவித்துள்ளனர். மேலும் மொத்தம் 52 பேர் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் காவல்துறையினர் ஹசீம் ஜூஸ் தொழிற்சாலையின் உரிமையாளரை பாதுகாப்பற்ற முறையில் தொழிற்சாலையை கட்டியதற்காக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் உரிய பாதுகாப்பின்றி தொழிற்சாலைக்குள் எளிதில் தீப்பற்றக்கூட ரசாயனங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக தொழிற்சாலையின் மூன்று நிர்வாகிகள் மற்றும் உரிமையாளரின் மகன்கள் 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.