வயிற்று வலி என சென்ற பெண்ணின் வயிற்றிலிருந்து 6 கிலோ எடை கொண்ட கட்டியை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்
சார்ஜாவில் அமையப்பெற்றுள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவமனை ஒன்றிற்கு 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடும் வயிற்று வலியுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். செரிமான பிரச்சனை மற்றும் நடப்பதில் சிரமத்துடன் அந்தப் பெண் இருந்து வந்துள்ளார். பல மருத்துவமனைகளில் ஏராளமான மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டும் அவருக்கு பிரச்சனை சரியாகவில்லை. பல்கலைக்கழகத்தின் மருத்துவமனையில் அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது கருப்பையில் கட்டி வளர்ந்து இருப்பதை கண்டறிந்தனர். அதோடு அது அப்பெண்ணின் கருப்பை குழாயில் இருந்து வளர்ந்திருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் பெண்ணின் வயிற்றில் இருந்த கட்டியை அகற்ற முடிவு எடுத்தனர். ஆனால் மருத்துவர்களுக்கு அதில் பெரும் சவால் ஒன்று காத்திருந்தது. வளர்ந்திருந்த கட்டி கருப்பையின் அருகே மிகவும் நெருக்கமாக இருந்ததால் கருப்பையின் குழாய் மற்றும் கருமுட்டை பகுதிகள் சேதம் அடைந்து விடாமல் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும். அப்பகுதியில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் இனப்பெருக்க உறுப்புகள் பாதிப்படைந்து இளம்பெண்ணின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் சூழல் இருந்துள்ளது.
ஆனாலும் சவாலை ஏற்ற மருத்துவர்கள் மிகவும் நுட்பமாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர் இதற்காக மகப்பேறு மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் முகமது தலைமையில் மருத்துவ குழு உருவாக்கப்பட்டு, அந்தப் பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்தனர். நீண்ட நேரம் நடந்த அறுவை சிகிச்சையின் முடிவில் இளம் பெண்ணின் வயிற்றில் இருந்து 6 கிலோ எடை கொண்ட கட்டி நீக்கப்பட்டது. மருத்துவர்களின் சாதனையை சார்ஜா மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இயக்குனர் டாக்டர் அலி பாராட்டியுள்ளார்