நாளைமுதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பதால் அத்திவரதரை தரிசிப்பதற்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் மொத்தம் 40 நாட்கள் நடைபெறும் அத்திவரதர் திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்று வருகிறது. அத்திவரதரை நாளுக்கு நாள் காண வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதைத் தொடர்ந்து இன்று சயனகோலத்தில் அத்திவரதரை காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நாளை முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார் என்றும் ஆகஸ்ட் 17ஆம் தேதி அத்திவரதர் திருவிழா நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பதை காண ஏராளமான, பக்தர்கள் கூட்டம் அலைமோதி வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் ,பக்தர்களுக்கான மருத்துவ வசதிகள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் அத்திவரதரை தரிசிப்பதற்கான நேரமும் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, வழக்கம் போல் காலை 5 மணி முதல் அத்திவரதரை தரிசிக்கலாம் என்றும், மாலை 5 மணி முதல் 8 மணிவரை அத்திவரதரை தரிசிக்க அனுமதி இல்லை என்றும், மீண்டும் 8 மணிக்கு மேல் தரிசனத்தை தொடங்கி நள்ளிரவு வரை தரிசனம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விஐபி டோக்கன்களை பெற்றவர்களுக்கு மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.