சேலத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் படுகாயம் அடைய 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் உள்ள கைலாசநாதர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு வருடந்தோறும் திருவிழா நடைபெறும். அந்த வகையில் இந்த வருட தைப்பூசம் கடந்த எட்டாம் தேதி முதல் தொடங்கியது. அந்த வகையில், தேர் நான்கு ரத வீதி வழியாக தினந்தோறும் சுற்றி இழுத்து வரப்பட்டு பின் சாமி சிலை கோவிலுக்குள் அனுப்பப்படும். அந்த வகையில்,
நேற்று முன்தினம் நடைபெற்ற தேரோட்டம் விழாவின் போது அப்பகுதியில் ஒரு தரப்பினர் இசை நிகழ்ச்சியும் மற்றொரு தரப்பினர் தேரை இழுத்து ஊர்வலம் வந்தும் விழாவை கொண்டாடினர். அப்போது இசை நிகழ்ச்சி நடத்திய தரப்பினர் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இருந்ததால் தேர் இழுத்து வந்தவர்களுக்கு இடைஞ்சலாக இருந்தது. அப்போது ஏற்பட்ட தகராறில் லோகேஷ் என்பவரை தேர் இழுத்து வந்தவர்களில் ஒருவர் தாக்கி விட்டார்.
இதையடுத்து அவர் தனது தரப்பினரிடம் இது குறித்து கூற அங்கே 100க்கும் மேற்பட்ட ஒரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் கூடி சாமியை செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று மறியல் செய்தனர். இதையடுத்து இரு தரப்பினரும் ஒன்றுகூடி மோதலில் ஈடுபட தயாராக இருந்த சூழ்நிலையில் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதையடுத்து சமாதானத்திற்கு பின் சாமி சிலை கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கற்களையும் கம்புகளையும் வீசி மாறி மாறி தாக்கி கொண்டனர். இதில் 7 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மோதல் குறித்து காவல்துறையினர் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.