மோட்டார் சைக்கிளின் மீது கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சாமியார் கிணறு பகுதியில் விவசாயியான சின்னசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு செல்வராஜ், சுந்தரம், சிவகுமார் என்ற மூன்று மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னசாமியின் மகனான சுந்தரம் என்பவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் போது துப்பாக்கி குண்டு பட்டு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இவர்களில் சிவகுமார் அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியராகவும், செல்வராஜ் சாப்ட்வேர் என்ஜினியராக அமெரிக்காவில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் சின்னசாமியின் மனைவியான முத்தம்மாள் என்பவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து சின்னசாமி தேவியாக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள ஏ.டி.எம். மையத்தில் சிகிச்சைக்கு தேவையான பணத்தை எடுப்பதற்காக சாலையைக் கடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் ஒன்று சின்னசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் சின்னசாமி மற்றும் முத்தம்மாள் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதால் பலத்த காயம் அடைந்து உயிருக்காக போராடிக் கொண்டிருந்தனர்.
இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சின்னசாமி மற்றும் முத்தம்மாளிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர்கள் 2 பேரும் ஒரே நாளில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று சின்னசாமி மற்றும் முத்தம்மாளின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான செல்வராஜை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.