சைக்கிளின் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முள்ளக்காடு பகுதியில் கூலித் தொழிலாளியான சங்கரலிங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சங்கரலிங்கம் வேலைக்காக தனது சைக்கிளில் தூத்துக்குடி சாலையை கடப்பதற்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் ஒன்று இவரின் மீது மோதிவிட்டு நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டது. இதில் சங்கரலிங்கம் பலத்த காயம் அடைந்து உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார்.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சங்கரலிங்கத்திற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று சங்கரலிங்கத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்தவிபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.