மின்சாரம் பாய்ந்து மாணவி பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பசுவந்தனை பகுதியில் கூலித் தொழிலாளியான மலைச்சாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மகாபிரபு என்ற மகனும், பத்தாம் வகுப்பு படித்து வந்த மதுபாலா என்ற மகளும் இருந்துள்ளார். இந்நிலையில் மதுபாலா தனது வீட்டில் டி.வி பார்ப்பதற்காக அங்கிருந்த சுவிட்சை போடும்போது திடீரென அதிலிருந்து மின்சாரம் பாய்ந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனையடுத்து வெளியிலிருந்து உள்ளே சென்ற மதுபாலாவின் தாய் தனது மகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மதுபாலாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.