அதிபரை கொலை செய்தவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஹைதி நாட்டின் அதிபராக இருந்த ஜோவேனல் மொய்ஸ் கடந்த ஜூலை மாதம் 7ஆம் தேதி வீட்டில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் அவரின் மனைவியும் சில காயங்களுடன் உயிர் பிழைத்தார். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் 40க்கும் மேற்பட்டோர் மீது சந்தேகம் எழுப்பப்பட்டு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களில் 18 பேர் கொலம்பியாவை சேர்ந்தவர்கள், 5 பேர் அமெரிக்க நாட்டினர், 4 பேர் போலீஸ் அதிகாரிகள் என்று தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கில்பர்ட் டிராகன் என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை போர்ட் ஆ பிரின்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துவிட்டார். இந்த செய்தியானது அனைவரிடத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.