ஹைதி அதிபரின் இறுதிசடங்கில் ஏற்பட்ட கலவரத்தை போலீசார் கட்டுக்குள் கொண்டுவந்த பிறகு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கரீபியன் தீவில் உள்ள ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனால் மாய்சே கூலிப்படை ஒன்றால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் அவர் மனைவி படுகாயமடைந்தார். இதனை அடுத்துஅவர் அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் திரும்பியுள்ளார். இந்த நிலையில் ஜோவெனால் மாய்சே இறுதிச்சடங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த இறுதிச்சடங்கில் அதிபரின் மனைவி மார்ட்டின் மோயிஸ் தனது மூன்று பிள்ளைகளுடன் கலந்து கொண்டுள்ளார். இதனை அடுத்து பல்வேறு உயர்மட்ட தலைவர்கள் அதிபரின் இறுதிசடங்கில் கலந்து கொண்டனர்.
மேலும் அதிபர் கொலையில் பல்வேறு மூத்த அதிகாரிகள் தொடர்பு இருப்பதால் இறுதி சடங்கு செய்யும் இடத்தில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்ட போதும் திடீரென கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டும் துப்பாக்கியால் சுடும் சத்தமும் கேட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவியதை அடுத்து போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பின்னர் அதிபரின் உடலானது சவப் பெட்டியில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.