Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அதிக பணம் வாங்கி தாரேன்” 6 கோடி ரூபாய் மோசடி…. பாதிக்கப்பட்டவர்கள் மனு….!!

பழைய நகைகளை விற்று தருவதாக மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள கோடிப்பள்ளம் மற்றும் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ஒருவர் பல்வேறு நகைக்கடைகளில் மதிப்பீட்டாளராக வேலை பார்த்தார். இந்நிலையில் அவர் பழைய நகைகளை கொடுத்தால் அதை அதிக விலைக்கு விற்றுத் தருவதாக எங்களிடம் ஆசை வார்த்தைகளை கூறினார். இதனை நம்பி 50-க்கும் மேற்பட்டவர்கள் பழைய நகைகளை அவரிடம் கொடுத்தோம். அதன்படி ஒவ்வொருவரும் 4 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை என மொத்தம் 6 கோடி மதிப்பில் பழைய நகைகளை அவரிடம் கொடுத்துள்ளோம்.

இதனையடுத்து நாங்கள் அவரிடம் உரிய பணம் கேட்டபோது பலமுறை பழைய நகைகளை மாற்றவில்லை என்று பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த நாங்கள் தொடர்ந்து பணம் கேட்டபோது அவர் கொடுக்க மறுத்து விட்டார். இவ்வாறு பழைய நகைகளை வாங்கிய அவர் எங்களை மோசடி செய்தது தெரியவந்தது. அதன்பின் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று நாங்கள் பார்த்தபோது பூட்டி கிடந்தது. இதனைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்களிடம் அவரை பற்றி விசாரித்தபோது குடும்பத்தினருடன் தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது. ஆகவே பழைய நகைகளை அதிக விலைக்கு விற்று தருவதாக மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |