அதிக வலிமை வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தை பெற்றுள்ளது.
ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு கடவுச்சீட்டு மிகவும் அவசியம். இதனை மற்ற நாட்டிற்குள் நுழைவதற்கான அனுமதி சீட்டு என்று கூட கூறலாம். இந்த நிலையில் தற்பொழுது Arton Capital கடவுச்சீட்டு பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அதிக புள்ளிகள் பெற்று உலகளவில் முதலிடத்தை ஐக்கிய அரபு அமீரகம் பிடித்துள்ளது. ஏனென்றால் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 152 நாடுகளுக்கு செல்லலாம் என்றும் அவர்களுக்கு அதில் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதாவது அதில் இருக்கும் 98 நாடுகளுக்கு விசா இல்லாமலும் 55 நாடுகளுக்கு அங்கு சென்ற பின் விசா அளிப்பதும் 46 நாடுகளுக்கு முன்னதாகவே விசா வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் முதல் இடத்தை பிடித்தது. ஆனால் 2020 ஆம் ஆண்டு 14 வது இடத்திற்கு பின்தங்கியது. தற்பொழுது மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு கொண்ட நாடாக மாறியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக நியூசிலாந்தின் கடவுச்சீட்டு உள்ளது. இதனை வைத்திருப்பவர்கள் 146 நாடுகளுக்கு செல்லலாம்.
மேலும் ஜேர்மனி, பின்லாந்து, ஆஸ்திரியா, லக்சம்பர்க், ஸ்பெயின், இத்தாலி, சுவிட்சர்லாந்து, தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 144 நாடுகளுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் உள்ள விசா விதிகள் குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. இது போன்று மத்திய கிழக்கு பகுதியில் இருக்கும் இஸ்ரேல் கடவுச்சீட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடுத்ததாக உள்ளது. குறிப்பாக உலகளவில் 17 வது இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும் இஸ்ரேல் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 89 நாடுகளுக்கு விசா இன்றியும் 37 நாடுகளுக்கு சென்ற பின்னர் விசா அளிக்கவும் 72 நாடுகளுக்கு முன்னதாகவே விசா வழங்கவும் அனுமதி பெற்றுள்ளது. ஆனால் உலகளவில் மிகவும் வலிமை குறைந்த கடவுச்சீட்டு இருக்கும் நாடாக ஆப்கனிஸ்தான் உள்ளது. இதனை தொடர்ந்து ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் சோமாலியா, கென்யா போன்ற நாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.