அமெரிக்க தேர்தல் கருத்துக் கணிப்பில் பின்னடைவை சந்தித்த அதிபர் ட்ரம்ப் தன் பரப்புரை நிபுணரை பதவி விலக்கியுள்ளார்.
உலகின் வல்லரசு நாடாக திகழும் அமெரிக்கா தற்போது கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சியில் அதிபர் ட்ரம்ப் பெரும் தோல்வி அடைந்ததாக பெரும்பாலானோர் குற்றம் கூறியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலானது வருகின்ற நவம்பர் மாதம் 3-ல் நடக்க உள்ளது. அதுபற்றி குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப்பும் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ஜோ பிடனும் போட்டியிட உள்ளனர். இதன் தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கணிப்பில் 6 முதல் 8 விழுக்காடு வரை ஜோ பிடனை விட ட்ரம்ப் பின்னடைவில் இருக்கின்றார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ட்ரம்ப் தோல்வி அடைந்ததால் வாக்காளர்களின் ஆதரவு பிடனுக்கு அதிகரித்துள்ளது என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இதனை தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் தன் பரப்புரை மேனேஜர் பிராட் பார்ஸ்கேலை அவர் பதவியில் இருந்து விலக்கியுள்ளார்.
அப்பதவிக்கு பில் ஸ்டீபியன் அவர்களை நியமித்திருப்பதாக ட்ரம்ப் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு 16 வாரங்களில் இருக்கின்ற நிலையில் ட்ரம்பின் இத்தகைய முடிவானது முக்கியமானதாக கருதப்படுகிறது. பிராட் பார்ஸ்கேல் டிஜிட்டல் துறையில் மிகுந்த அனுபவம் கொண்டிருப்பதால் பரப்புரை டிஜிட்டல் பிரிவிற்கு நன்றாக தலைமை ஏற்பார் என ட்ரம்ப் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி பரப்புரைகளுக்கு மூத்த ஆலோசகர் ஆக இருப்பார் எனவும் கூறியுள்ளார். ஓக்லஹோமாவின் துல்சாவில் நடந்த ட்ரம்பி-ன் தேர்தல் பேரணியில் 10 லட்சத்திற்கும் மேலானோர் கலந்துகொள்ள பதிவு செய்துள்ளதாக பார்ஸ்கேல் கூறி இருந்தார். ஆனால் 6,200 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால் தேர்தல் பேரணி தோல்வியடைந்ததால் பெரும் ஏமாற்றத்தை சந்தித்த ட்ரம்ப் தனது பரப்புரை மேனேஜரை பதவி விலக்கியதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர் கூறியுள்ளனர்.