வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் முத்து கிருஷ்ணா அவென்யூ பகுதியில் காஜா பேக் என்பவர் வசித்து வருகின்றார். இவர் உத்தரமேரூர் பஜார் தெருவில் சைக்கிள் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கின்றார். இதனையடுத்து காஜா பேக் தனது குடும்பத்தினருடன் ஆரணியில் உள்ள அவரது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் காஜா பேக் மீண்டும் வீட்டிற்கு சென்றபோது வீட்டின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதன்பின் வீட்டில் இருந்த 9 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டு இருப்பது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அது உத்தரமேரூர் பஜார் தெருவில் ஒரு டீக்கடையில் அருகில் சென்று நின்றது. எனவே கொள்ளையர்கள் திருடிவிட்டு பஜார் வீதியில் வந்து சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.