Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அது எங்களுக்கு சொந்தமான இடம்”…. நடுரோட்டில் உருண்ட பெண்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கோரிக்கை மனு கொடுக்க வந்த பெண் அமைச்சரின் கார் முன்பு தரையில் படுத்து உருண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்களை தேடி முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மனுக்களை பெற்றார். இதனையடுத்து அவர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் ஏறுவதற்கு முயற்சி செய்தபோது திருநல்லூரை சேர்ந்த இந்திரா என்பவர் அமைச்சரின் காரின் முன்பு தரையில் படுத்து உருண்டார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். எனினும் அந்த பெண் காரில் தேசிய கொடி கட்டி இருந்த கம்பியை பிடித்துக் கொண்டு விட மறுத்து விட்டார். இதனையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்த பெண்ணின் அருகில் வந்து விசாரணை மேற்கொண்டார். இந்த நிலையில் அந்த பெண் தான் வைத்திருந்த கோரிக்கை மனுவை அமைச்சரிடம் கொடுத்தார். அந்த மனுவை வாங்கி படித்த அமைச்சர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக பெண்ணிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

அதில் இந்திரா கூறியதாவது “எனது கணவர் இறந்து விட்டார். மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் எங்களுக்கு சொந்தமான நிலத்தை என் கணவரின் சகோதரர் கைப்பற்றி கொண்டார். இதற்கிடையில் எங்களுக்கு சொந்தமான மனையில் உள்ள வீட்டை சரிசெய்ய சென்ற எனது மகன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பின் எனது மகன் நேரில் சென்று விளக்கம் அளித்தபின் காவல்துறையினர் வழக்குப்பதிவு எதுவும் செய்யவில்லை. மேலும் என்னையும் சிலர் தாக்கினர். இதற்கிடையில் நான் கூலி வேலைக்கு சென்று வருகிறேன். எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |