என்ஜின் கோளாறு காரணமாக நடுக்கடலில் மாட்டிக்கொண்டு 7 மீனவர்களை கடலோர காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தருவைகுளம் பகுதியில் ஏராளமான மீனவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் 7 மீனவர்கள் விசைப்படகில் கடலுக்குள் சென்று மீன்பிடித்து கொண்டு திரும்ப கரைக்கு புறப்பட்டுள்ளனர். அப்போது அவர்கள் சென்ற படகில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் அதை இயக்க முடியாமல் அவர்கள் நடுக்கடலில் மாட்டிக்கொண்டு கரைக்கு திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.இந்நிலையில் மீனவர்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறையின் எண்ணிற்கு செல் போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்தத் தகவலை அறிந்து கொண்ட கடலோர காவல்துறையினர் ரோந்து கப்பலின் மூலம் அங்கு விரைந்து சென்று அவர்களின் படக்கிலுள்ள என்ஜினை சரி செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனாலும் அந்த எஞ்சினில் உள்ள டீசல் டேங்கில் தண்ணீர் புகுந்ததால் அதனை இயக்க முடியவில்லை. இதனையடுத்து காவல்துறையினர் அந்த 7 மீனவர்களையும் தங்களது படகில் ஏற்றிக்கொண்டு அதனை மற்றொரு படகின் மூலம் இணைத்து பத்திரமாக கரைக்கு கொண்டு வந்துள்ளனர். மேலும் காவல் துறையினர் மீனவர்களின் படகில் உள்ள என்ஜின் கோளாறையும், அவர்களுக்கு தேவையான உதவிகளை அளித்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.