குடும்ப பிரச்சனை காரணமாக பெற்ற தாயே தனது 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையம் பகுதியில் டிரைவரான கார்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு புஷ்பலதா என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு 2 வயதுடைய சர்வேஷ் என்ற மகனும், 1 வயதுடைய சஞ்சனா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் புஷ்பலதா குழந்தையுடன் தனது உறவினரின் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று தனது கணவரிடம் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு கார்த்தி கொரோனா தொற்று அதிகம் பரவி வருவதால் அங்கு குழந்தைகளுடன் செல்லக்கூடாது என்று மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மிகுந்த கோபத்துடன் இருந்த புஷ்பலதா தனது கணவர் உறங்கச் சென்றபோது இரண்டு குழந்தைகளையும் அழைத்து கொண்டு வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டார். இதனையடுத்து கார்த்தி கண் விழித்துப் பார்த்தபோது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் தனது உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டில் கார்த்தி தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் அமைந்துள்ள கிணற்றுக்குள் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அந்த அலறல் சத்தத்தை கேட்டு அப்பகுதியில் சென்ற சிலர் கிணற்றுக்குள் பார்த்துள்ளனர்.
அப்போது புஷ்பலதா தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்ததையும், அவரது அருகில் குழந்தையின் சடலம் மிதப்பதையும் பார்த்துள்ளனர். அதன்பின் உடனடியாக கிணற்றுக்குள் குதித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த புஷ்பலதாவையும், சடலமாக மிதந்த ஒரு குழந்தையின் உடலையும் மீட்டு விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கார்த்தி மற்றும் அவரது உறவினர்கள் அங்கு விரைந்து சென்று புஷ்பலதாவிடம் இன்னொரு குழந்தை எங்க என்று கேட்டுள்ளனர். அதற்கு புஷ்பலதா தன்னை உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு அனுப்பாததால் கோபமடைந்து தனது இரு குழந்தைகளையும் கிணற்றில் தூக்கிப் போட்டு விட்டு தானும் தற்கொலை செய்ய முயற்சி செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக கிணற்றுக்குள் குதித்து இன்னொரு குழந்தையை சடலமாக மீட்டனர்.இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு குழந்தைகளின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குடும்பத்தகராறு காரணமாக பெற்ற தாயே ஒன்றும் அறியாத குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த குற்றத்திற்காக புஷ்பலதா கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பெற்ற தாயே தனது 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.