தஞ்சை ரவுடியை 4 பேர் சேர்ந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள விளார் ரோடு அண்ணாநகர் முதல் தெருவில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருக்கிறது. இந்நிலையில் சூர்யா விளார் ரோட்டில் உள்ள ஒரு டீக்கடை அருகே ஆட்டோ ஸ்டாண்ட் திறந்தார். இதனை அறிந்த விளார் ரோடு இந்திரா நகரைச் சேர்ந்த லிங்கேஸ்வரன், ஹரிஹரன், நாகராஜ், சதீஷ்குமார் போன்றோர் சம்பவ இடத்திற்கு சென்று எதற்காக ஆட்டோ ஸ்டாண்ட் திறந்தாய் என கேட்டு சூர்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது வாக்குவாதம் முற்றியதில் லிங்கேஸ்வரன் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து சூர்யாவை அரிவாளால் வெட்டினர். இதனால் பலத்த காயமடைந்த சூர்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சூர்யா கொடுத்த புகாரின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லிங்கேஸ்வரன், ஹரிஹரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நாகராஜ், சதீஷ்குமாரை ஆகிய இருவரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.