கிரேனில் வேலை செய்து கொண்டிருக்கும் போது தவறி விழுந்ததில் வாலிபர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தபால் தந்தி காலனி பகுதியில் கணேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் வ.உ.சி. துறைமுகத்தில் உள்ள கப்பலில் கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கணேஷ் கப்பலின் ஏழாவது தளத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக கால் இடறியதால் மேலே இருந்து கீழே விழுந்து விட்டார்.
இதில் கணேஷ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.