கொரோனா நெருக்கடி காரணமாக உலகம் முழுவதும் வட்டி விகிதங்கள் அனைத்தும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக உலக அளவில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால் வட்டியை உயர்த்த வேண்டிய நெருக்கடியில் மத்திய வங்கிகள் அனைத்தும் உள்ளன. குறிப்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தொடங்கிய பிறகு பணவீக்கம் மேலும் மோசமடைந்துள்ளது. உணவு பொருட்கள் முதல் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்கள் வரை பல சரக்குகளின் விலையும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் பணவீக்கம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில் ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தியாவிலும் ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தும் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. கடந்த கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டியை மாற்றவில்லை. இந்த நிலையில் தற்போதைய கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் 4 சதவீதமாக நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏடிஎம் கார்டு இல்லாமல் ஏடிஎம் களில் இருந்து யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதியை நாட்டின் அனைத்து வழிகளிலும் கொண்டுவர திட்டமிட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இந்த சேவை வாடிக்கையாளர்களின் வசதியை அதிகரிக்கவும், மோசடி சம்பவங்களை தடுக்கவும் உதவும். இதனை செயல்படுத்த NPCI, ATM நெட்வொர்க்குகள் மற்றும் வங்கிகளுக்கு விரிவான வழிகாட்டுதலை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.