ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50 க்கும் மேற்பட்ட அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது. மேலும் கலெக்டர் அலுவலகத்துக்குள் பாரத் ஸ்டேட் வங்கியும், அதனை ஒட்டி ஏ.டி.எம். மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். மையத்தை கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தங்களது தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏ.டி.எம். மையத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளிவந்தது. இதனை பார்த்த வங்கியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து வேகமாக வெளியேறியுள்ளனர். மேலும் ஏ.டி.எம். மையத்தில் இருக்கும் யு.பி.எஸ். போன்றவற்றில் தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது.
இதுகுறித்து வங்கி ஊழியர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஏ.டி.எம். மையத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை நீரை பாய்ச்சி அணைத்தனர். மேலும் தீயணைப்பு வீரர்களின் முயற்சியால் ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்த 10 லட்சம் ரூபாய் தப்பியது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.