Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளை முயற்சி …. வசமாக சிக்கிய நபர் …. கைது செய்த காவல்துறையினர் ….!!!

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள நாகை சாலையில் குருகுலம் பெண்கள் பள்ளி எதிரே தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் கடந்த 13-ம் தேதி இரவு நேரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன், வேதாரண்யம்  இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அத்துடன் ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை அரிவாளால் உடைக்கும் காட்சி பதிவாகியிருந்தது.

இதையடுத்து நாகையிலிருந்து போலீஸ் மோப்ப நாய் துலிப் வரவழைக்கப்பட்டு ஏடிஎம் மையத்தில் சோதனை நடத்தப்பட்டது .மேலும் தடய அறிவியல் நிபுணர்கள் ஏடிஎம் மையத்தில் இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சித்த பெரியகுத்தகை கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க பயன்படுத்திய அரிவாளை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |