ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள விருப்பாச்சிபுரத்தில் இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்தில் திடீரென்று அலாரம் ஒலித்ததால் அதிர்ச்சி அடைந்துள்ள பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் பாகாயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் நேற்று காலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது அதில் நள்ளிரவு 2 மணியளவில் மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் எந்திரத்தை கல்லால் உடைக்க முயன்றுள்ளார். அப்போது அலாரம் ஒலித்ததால் பயந்துபோன மர்மநபர் கல்லை அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த மர்ம நபர் அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இது குறித்து அவரிடம் விசாரித்த காவல்துறையினர் தான் மதுபோதையில் செய்ததாக கூறியிருக்கிறார். மேலும் லோகேஷின் மீது காவல் நிலையத்தில் பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் காவல்துறையினர் லோகேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.