திருவள்ளூர் மாவட்டத்தில் திருவேற்காடு பகுதி அருகே, ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து வாலிபர் கொள்ளை முயற்சியில், ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியை அடுத்த கோலடி மெயின் ரோட்டில் , ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இந்த ஏ.டி.எம் மையத்திற்கு ,நேற்று அதிகாலையில் ஒரு நபர் பணம் எடுக்கச் சென்ற போது ,அங்கு ஒரு வாலிபர் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருப்பதை பார்த்து, அதிர்ச்சியடைந்தார் . இது பற்றி உடனடியாக திருவேற்காடு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ,வாலிபரை பிடித்து கைது செய்தனர்.
வாலிபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், திருவேற்காடு பகுதியில், செல்லியம்மன் நகரை சேர்ந்த 22 வயதுடைய ஜோசப் என்பது தெரியவந்தது. அவரது பெற்றோர்கள் வெளியூரில் இருப்பதாகவும், இவர் இங்கு தனியாக இருந்து டிரைவராக பணிபுரிந்து வருவதாகவும் தெரிந்தது. ஊரடங்கு காரணமாக வேலை எதுவும் கிடைக்காததால், செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வந்ததாகவும் , இதனால் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து ,பணத்தை எடுப்பதற்காக கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும், போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பல்வேறு கோணத்தில் அவர் மீது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது