நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக நகராட்சியை யார் கைப்பற்றுவது என்பதில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க கட்சியினர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம், பார்வதிபுரம் மற்றும் வடலூர் ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பின்னர் இவை தேர்வுநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வடலூர் நகராட்சியில் 17,692 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 7 பேரும், 16,909 ஆண் வாக்காளர்களும் என மொத்தமாக 34,608 வாக்காளர்கள் இருக்கின்றனர்.
தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதில் வடலூரில் 27 வார்டுகள் உள்ளது. இந்த நகராட்சியானது இம்மாவட்டத்தின் மையப் பகுதியிலும், கும்பகோணம் மற்றும் சென்னை உள்பட ஏழு முக்கிய நகரங்களை இணைக்கும் மையமாகவும் உள்ளது. கடந்த முறை பேரூராட்சியாக இருந்த போது தி.மு.க-வை சேர்ந்த ராமசந்திரன் பேரூராட்சி தலைவராகவும், ராஜகுமாரி துணை தலைவராகவும் இருந்துள்ளனர். பின்னர் வடலூர் பேரூராட்சியை தி.மு.க தொடர்ந்து கைப்பற்றி வந்திருக்கிறது.
இதில் தி.மு.க அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில் அக்கட்சியினர் வடலூரை தி.மு.க-வின் கோட்டையாக மாற்ற கூட்டணி கட்சியான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகளுடன் சேர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். அதே சமயத்தில் அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் ஆட்சியை கைப்பற்ற மல்லுக்கட்டி போட்டியிடுகின்றனர். மேலும் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் கடலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு, புதிய நகர பகுதியில் வசிக்கும் மக்கள் தொகைக்கேற்ப மின்மயானம் ஆகியவற்றை இதுவரை முழுமையாக தீர்க்க முடியாமல் இருந்து வருகிறது. இதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் புதிய அரசு கலைக் கல்லூரி, சென்னை சாலையில் பயணிகள் நிழற்குடை, வடலூர் வழியாக ரயில் இயக்கம், தொழு உரம் தயாரிப்பு, அனைத்து வார்டுகளிலும் வடிகால் வசதியுடன் கூடிய தார் சாலைகள் அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பின்னர் முதல் முறையாக வடலூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்கிறது. இதில் முதல் முறையாக நகராட்சியை யார் கைப்பற்றுவது என்பதில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. எனவே கடலூர் நகராட்சியில் உள்ளாட்சித் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.