இரு வீட்டின் கழிவு நீர் செல்லும் தகராறில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள கோச்சடை கிராமத்தில் வசித்து வருபவர் முத்தையா. இவருடைய வீட்டிற்கு அருகில் ரகு என்பவருடைய வீடு உள்ளது. இவர்கள் இருவரின் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ரகு தனது ஆதரவாளர்களுடன் முத்தையாவின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வாக்குவாதம் முற்றியதால் ரகு மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் உருட்டுக்கட்டையால் முத்தையாவை தாக்கியுள்ளனர். இதில் முத்தையா சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரது குடும்பத்தினர் முத்தையாவை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.