டாக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த விவசாயி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆலத்தூர் பகுதியில் விவசாயி ரவி வசித்து வருகிறார். இவருடைய சகோதரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காத காரணத்தினால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அவரது உடல் சுகாதார பணியாளர்களால் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்பின் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு வந்த ரவி இறந்த தனது சகோதரர் வைத்திருந்த ஏ.டி.எம் கார்ட், அடையாள அட்டை, மணிபர்ஸ் உள்ளிட்டவைகளை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால் அப்போது பணியில் இருந்த டாக்டர் சுகந்தன் “நான் உங்கள் சகோதரர் இருந்த அன்று பணியில் இல்லை” என ரவியிடம் கூறியுள்ளார். இதனை கேட்டதும் ஆத்திரமடைந்த ரவி டாக்டர் சுகந்தனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து டாக்டர் சுகந்தன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து டாக்டர் சுகந்தனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவியை கைது செய்துள்ளனர்.