பிரிட்டனில் இறுதிச்சடங்கு நடந்தபோது திடீரென்று தாக்குதல் நடத்தப்பட்டதால், சவப்பெட்டியை போட்டுவிட்டு மக்கள் பதறியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்தில் இருக்கும் Paisley என்னும் நகரில் உள்ள லிண்வூட் பகுதியில் இருக்கும் ஒரு கல்லறையில் நேற்று முன்தினம் காலையில் 85 வயதுடைய, Teresa Ward என்பவரின் உடலை அடக்கம் செய்வதற்கு இறுதிச்சடங்குகள் நடந்தது. அதன்பின்பு, உடலை அவரின் உறவினர்கள் சவப்பெட்டியில் வைத்து சுமந்து செல்வதற்கு தயாராக இருந்த சமயத்தில், திடீரென்று மர்மநபர்கள் இறுதிச்சடங்கில் நுழைந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால், தங்களைப் பாதுகாக்க வேறு வழி தெரியாமல் சவப்பெட்டியை அங்கேயே போட்டுவிட்டு உறவினர்கள் ஓடிவிட்டனர். சிறிது நேரம் கழித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.
இக்கொடூர தாக்குதலில் ஏழு நபர்கள் பலத்த காயங்களுடன், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். அதன்பின்பு Teresa -வின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மேலும், காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், தாக்குதல் நடத்திய மர்ம நபர்களுக்கும், இறுதிச்சடங்கில் பங்கேற்ற குடும்பத்தினருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரியவந்திருக்கிறது.