அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டதில் பத்து நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டில் இருக்கும் நியூயார்க் மாகாணத்தின் ஒரு பல்பொருள் அங்காடிக்கு நேற்று முன்தினம் வாகனத்தில் வந்த 18 வயதுடைய ஒரு இளைஞர், திடீரென்று அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினார். இதில் பத்து நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் அங்கு இருந்ததால் தகுந்த நேரத்தில் தடுத்து அதிக உயிர்பலி ஏற்படாமல் காப்பாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரை கைது செய்திருக்கிறார்கள். பெய்டன் ஜென்ட்ரான் என்ற அந்த இளைஞர் கறுப்பினத்தவர்களை நோக்கி தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இது குறித்து காவல்துறை அதிகாரி தெரிவித்ததாவது, கவச உடை அணிந்தபடி நேற்று முன்தினம் பல்பொருள் அங்காடியில் நுழைந்த நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் தன் ஹெல்மெட்டில் கேமராவை பொருத்தி வைத்து, இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பியிருக்கிறார். இது இனவெறி தாக்குதல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, அந்த இளைஞரை சிறையில் அடைத்துள்ளனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.