கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை செய்த பெண் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த கவுரி திருக்குமரன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றிய அ.தி.மு.க பிரமுகர் மாது என்பவருக்கும், இவருக்கும் இடையே தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகள் குறித்து பிரச்சினை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கொல்லப்பட்டி கிராமத்தில் 2.11 லட்ச ரூபாய் மதிப்புடைய கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கவுரி திருக்குமரன் பூமி பூஜை செய்ய வந்துள்ளார்.
அப்போது அங்கே வந்த அ.தி.மு.க பிரமுகர் மாது நாங்கள் ஏற்கனவே இந்த பணியை தொடங்கி விட்டோம் எனக் கூறி ஊராட்சி மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் ஊராட்சி தலைவரான கவுரியை தாக்கியதாகவும், இதில் அதிர்ச்சி அடைந்த கவுரி திருக்குமரன் திடீரென சாலையில் அமர்ந்து அ.தி.மு.க பிரமுகரை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், தாசில்தார் சின்னா, காவல்துறை சூப்பிரண்டு தினகரன் மற்றும் பிற காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைவாக சென்று தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
இதில் தர்ணாவில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவரிடம் அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து தலைவர் கவுரி திருக்குமரன் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை தொடங்குவதற்காக பூமி பூஜையை தொடங்கி வைத்துயுள்ளார். மேலும் இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் கவுரி திருக்குமரன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.