தேனியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த துணைமுதல்வர் ops மகனின் காரை தாக்கியதாக கூறி 43 முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நேற்றைய தினம் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பொது கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகவும் சிறப்புரையாற்றவும் துணைமுதல்வர் ops மகனும், அப்பகுதி எம்பியுமான ரவீந்திரநாத் குமார் பங்கேற்றார்.
விழாவிற்கு அவர் வருவதை அறிந்த முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அவர் வாக்களித்ததை கண்டித்து கருப்பு கொடி காட்டப் போவதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திடல், சிக்னல் மற்றும் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட காலவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து பொதுக்கூட்டத்திற்கு ரவீந்திரநாத் குமார் தனது காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது காரை முற்றுகையிட முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்தவர்கள் அவரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
மேலும் அவரது காரை சிலர் கைகளால் தாக்கியதாகவும் பின்னால் வந்த பாஜக நிர்வாகிகள் காரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 43 முஸ்லீம்களை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கைது நடவடிக்கைக்கு பின் பலத்த பாதுகாப்புடன் மேடையில் ஏறி ரவீந்திரநாத் குமார் பேசினார். மேலும் அவரது வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.