Categories
அரசியல் மாநில செய்திகள்

மோதலைத் தடுக்க வந்த காவலருக்கு அடி – வாக்கு எண்ணிக்கை மையத்தில் களேபரம்!

திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணிக்கை மையத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்க வந்த காவலர்களைத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பன்னீர்க்குண்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சிவமணி மற்றும் கவிதா ஆகியோரின் வாக்குகள் இன்று திருமங்கலம் வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்பட்டது. இதில் சிவமணி கூடுதல் வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்துள்ளார்.

இந்நிலையில், வாக்கு எண்ணும் அலுவலர்கள் வாக்குச் சீட்டினை சரியாக காண்பிக்கவில்லை என கவிதா தரப்பு முகவர்கள் சத்தமிட்டுள்ளனர். அதற்கு சிவமணி தரப்பு முகவர்கள் ‘நாங்கள்தான் முன்னிலை பெற்றுவிட்டோம், அப்புறம் எதற்கு சத்தம் போடுகிறீர்கள்’ என கோபத்துடன் பென்சிலால் கவிதா தரப்பு முகவர்களைத் தாக்கியுள்ளனர்.

இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட அங்கிருந்த காவலர்கள், அவர்களை மையத்தைவிட்டு வெளியேற்றினர். வெளியே வந்த இரு தரப்பினரும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டதால், வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே இருந்த காவலர்கள், அங்கு வந்து இருதரப்பினரையும் விலக்க முற்பட்டபோது அவர்கள் காவலர்களையும் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு மோதலில் ஈடுபட்ட கும்பலை காவல் துறையினர் அடித்து விரட்டினர். இதில் இருவர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் வாக்கு எண்ணும் மையத்துக்குள் பரபரப்பு ஏற்பட்டது. தகராறில் ஈடுபட்ட ஜோதிமுருகன், வினோத் உட்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்து திருமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Categories

Tech |