சிலிண்டர் திருடுவதை தடுத்து கண்டித்த தனது அண்ணியின் மீது பெட்ரோலை ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய சகோதரரான குமாரவேல் என்பவர் 2019ஆம் ஆண்டு தனது தந்தை கிருஷ்ணனை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் அவர் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அவர் சக்திவேலின் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரை திருட முயற்சி செய்துள்ளார். இதனை கவனித்த சக்திவேலுவும் அவருடைய மனைவியும் குமாரவேலுவை கண்டித்து அனுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த குமாரவேல் தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து வந்து தனது அண்ணியின் மீது ஊற்றி தீயை பற்றவைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதில் சக்திவேல் மனைவிக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக கோயம்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதனை அடுத்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் குமாரவேல் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினரால் தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்.