கர்நாடக மாநிலத்தை இரண்டாகப் பிரித்து வட கர்நாடகம் என்று உருவாக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இங்கு நேற்று ராஜ்யோத்சவா கொண்டாடப்பட்டது. இந்த விழா வட கர்நாடகா பகுதியிலும் கொண்டாடப்பட்டது. அப்போது தனி மாநில வட கர்நாடகா குழுவினர் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு முன்னால் அமைச்சர் எம்.எஸ். பட்டீல் தலைமை தாங்கினார். இவர்கள் போராட்டத்தின் போது மறைந்த அமைச்சர் உமேஷ் கட்டியின் உருவம் பொறித்த கொடியை ஏந்தி கொண்டே சென்றனர்.
அதோடு தனி மாநில கொடியையும் ஏற்றுவதற்கு அவர்கள் முயற்சி செய்தனர். இதனால் முன்னாள் அமைச்சர் பட்டீல் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கர்நாடகா மற்றும் வட கர்நாடகா என்று அரசு பாகுபாடு பார்ப்பதாகவும், இட ஒதுக்கீடு, ராஜ்யோத்சவா விருது, அரசு பணி போன்றவற்றில் ஒதுக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும் தெலுங்கானா மாநிலத்தைப் போன்று வட கர்நாடகாவும் தனியாக பிரிந்தால் மட்டுமே கிடைக்க வேண்டிய அங்கீகாரங்கள் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.