கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக ஒருவர் தீக்குளிக்க முயற்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தக்குடி கிராமத்தில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தில் கொட்டகை அமைத்து மாடு மற்றும் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த கொட்டகையை தொழிலதிபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி கேட்ட போது குணசேகரனை தொழிலதிபர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக குணசேகரன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் மன உளைச்சலில் அவர் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.