தேனி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் ரேஷன் அரிசிகளை பதுக்கி வைத்திருந்த 2 பேரை கைது செய்த போலீசார் 10 டன் அரிசிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இதனை தடுக்க காவல் துறையினரும் அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தமபாளையத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஆர்டிஓக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ஆர்,டி.ஓ கவுசல்யா,கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், துணை தாசில்தார் சுருளி ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவில் உத்தமபாளையம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது அங்கிருந்த களத்துமேட்டில் தார்பாய் போட்டு அரிசி மூட்டைகள் மூடி இருந்ததை அதிகாரிகள் கண்டுபித்துள்ளார். இதனையடுத்து அங்கு 209 ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ உடனடியாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் உமாதேவிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் 9 டன் எடை கொண்ட அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து உத்தமபாளையம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய பாறைமேட்டு பகுதியை சேர்ந்த மணிகண்டன்(32)“ என்பவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் பெரியகுளம் அடுத்துள்ள புதுக்கோட்டை பகுதியில் இயங்கும் அரிசி ஆலையில் உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் உமாதேவி ஆய்வு செய்த போது ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் ஆலையில் இருந்த 1,775 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து ஆலை உரிமையாளர் அன்வர்சதாத்து(43) என்பவரையும் கைது செய்துள்ளனர்.