தேனி மாவட்டத்தில் ஆடுகளை திருட முயற்சி செய்த இளைஞனை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள கரிசல்பட்டியில் ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக ஆடுகளை வைத்து வளர்த்து வருகின்றார். இந்நிலையில் ஜெயராமன் நேற்று முன்தினம் அவரது ஆடுகளை அருகில் உள்ள காட்டில் மேய்த்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த மர்மநபர் ஒருவர் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை நைசாக ஆட்டோவில் திருட முயன்றுள்ளார்.
இதனைப்பார்த்த ஜெயராமன் சத்தம்போட்டு அவரை பிடிக்க முயற்சி செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஆடுகளை திருட முயன்றவரை பிடித்து ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் அணைக்கரைப்பட்டியை சேர்ந்த கோபி(23) என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கோபி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.