காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கான எண்ணிக்கை 2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதையடுத்து சிறப்பு தரிசனத்திற்கு 300 ரூபாய் கட்டணத்தில் ஆன்லைனில் 500 பக்தர்கள் மட்டுமே நாளொன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை அதிகரிக்க கோரி பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அர்ச்சகர்கள் , அறநிலைய துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஆலோசனைக்கு பின் அறநிலைய துறை இணையதளத்தில் 2,000 பக்தர்கள் வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்றும், தரிசனத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தரிசனமானது காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதற்கிடையே வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நின்ற கோலத்தில் அத்திவரதர் தரிசனம் நடைபெறும் என்றும், 18 ஆம் தேதி அதிகாலையில் அத்திவரதர் சிலை மீண்டும் குளத்தில் வைக்கப்படும் என்றும் அறநிலையத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.