ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் வங்காளதேச அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது .
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 டி20 விளையாடி வருகிறது . இதில் முதல் 2 போட்டிகளிலும் வங்காளதேச அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான 3-வது டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் மக்மதுல்லா 52 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டும் , ஹேசில்வுட் மற்றும் சாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதன்பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 128 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடுவது. ஆனால் வங்காளதேச அணியின் பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. இதில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 51 ரன்கள் எடுத்தார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 117 ரன்களில் சுருண்டது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றுள்ளது . இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றிய வங்காளதேச அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் வங்காளதேச அணி முதல் முறையாக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.