ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3-ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 147 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார் .இதன் பிறகு மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது முதல் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இரண்டாவது நாள் ஆட்டம் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் எடுத்தது .இதில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 94 ரன்னும், மார்னஸ் லேபஸ்சேகன் 74 ரன்னும், டிராவிஸ் ஹெட் 112 ரன் எடுத்தனர்.
இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் சிறப்பாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் 152 ரன்னில் ஆட்டம் இழந்தார் .இறுதியாக ஆஸ்திரேலிய அணி 104.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 425 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி சார்பில் மார்க் உட் 3 விக்கெட் கைப்பற்றினார் . இதன் பிறகு இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹமீத் 27 ரன்னும் , ரோரி பர்ன்ஸ் 13 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர் .இதன்பிறகு கேப்டன் ஜோ ரூட் – டேவிட் மலன் ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர் .இதனால் 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் குவித்துள்ளது .இதில் டேவிட் மலன் 80 ரன்னும், கேப்டன் ஜோ ரூட் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.