ஆஷஸ் டெஸ்ட் தொடரில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது .
ஆஸ்திரேலியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வந்தது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்னில் சுருண்டது. இதன்பிறகு இந்த முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2-ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் குவித்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 82 ரன்கள் முன்னிலையில் இருந்தது .அதிகபட்சமாக தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் 76 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 4 விக்கெட்டும் ,ராபின்சன் மற்றும் மார்க் வுட் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதன்பிறகு 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து அணி வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 68 ரன்களில் சுருண்டது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலன்ட் 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார் .இதனால் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியது.