டி20 கிரிக்கெட்டில் கே.எல் ராகுலால் அணியில் இடம் கிடைக்காமல் தவிக்கும் ரிஷப் பண்ட் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
எம்.எஸ் தோனிக்கு பிறகு இந்திய டி20 அணியில் இளம்வீரர் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ஆனால் தோனியின் இடத்திற்கு பண்ட் சரியானவர் தானா என அவர் மீது விமர்சனம் எழுந்தது. இதையடுத்து ஆஸி தொடரில் காயம் காரணமாக விலகிய பிறகு பண்டுக்கு பதிலாக கே.எல் ராகுல் அணியில் இடம்பிடித்தார்.
அணியில் இடம் பிடித்ததை தொடர்ந்து அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதனால் ரிஷப் பண்ட்டு_ க்குப் பதிலாக கே.எல் ராகுல்தான் நியூசிலாந்து தொடரில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமின்றி பேட்டிங்கிலும் கலக்கி வருகிறார். ஆகவே ரிஷப் பண்டு_ க்கு அணியில் ஆடும் லெவன் இடம் கிடைக்குமா என்பதில் அனைவருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரிஷப் பண்ட் விரைவில் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிப்பார் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தலைமை பயிற்சியாளரும், ஆஸி முன்னாள் அதிரடி ஆட்டக்காரருமான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் பேசுகையில் ‘‘ரிஷப் பண்ட் ஒரு இளம் வீரர். அவரிடம் அதிக அளவில் திறமை இருக்கிறது. ஐபிஎல் தொடரில் அவருடன் பணியாற்றுவதை எதிர்பார்த்து நான் கொண்டிருக்கிறேன். அனைவரும் நினைப்பதை விட விரைவில் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார்’’ என்றார்.