ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் பாலியல் ரீதியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் அங்கு பணிபுரியும் ஆண் ஊழியர்கள் இணையத்தில் பகிர்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் ஒரு பெண் அரசாங்க ஆலோசகர் சக அரசு ஊழியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் சீண்டல் போன்ற புகைப்படங்களையும், வீடியோக்களையும் அங்கு வேலை செய்யும் ஆண் ஊழியர்கள் பேஸ்புக் மெசேஞ்சரில் தனி குழுவை அமைத்து பகிர்ந்து வருகின்றனர் என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
அந்த குழுவிலிருந்து வெளியான சில புகைப்படங்கள் ஆஸ்திரேலியாவையே உலுக்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியதாவது, ” எனது அரசாங்கத்தையே உலுக்கிய பாலியல் குற்றங்கள் எனக்கு பெரும் அதிர்ச்சியையும், வெறுப்பையும் ஏற்படுத்தியது. பாலியல் குற்றங்கள் என்பது மோசமானது . மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபரை பணிநீக்கம் செய்துள்ளேன்” என்று கூறியுள்ளார். இதற்கிடையில் ஸ்காட் மோரிசனின் அரசாங்கத்திற்கு எதிராக ஆஸ்திரேலிய மக்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.