இயற்கைக்கான உலகளாவிய நிதியம் ஆஸ்திரேலிய அரசு முக்கியத்துவம் வாய்ந்த 1,500 சூழலியல் பகுதிகளை பாதுகாக்க தவறி விட்டதாக தெரிவித்துள்ளது.
நேற்று இயற்கைக்கான உலகளாவிய நிதியம் சூழல் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த முடிவில் சூழியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை ஆஸ்திரேலிய அரசு பாதுகாக்க தவறி விட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவில் மொத்தம் 920 சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த கடற்பரப்பில் 115 பகுதிகளும், 6,001 சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலபரப்பில் 1,542 பகுதிகளும் பாதுகாக்கப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலிய கடற்பரப்பில் 199 பகுதிகளும், நிலபரப்பில் 2,218 பகுதிகளும் குறைந்தபட்ச பாதுகாப்பில் இருப்பது உலகளாவிய நிதியத்தின் வரையறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் ஆபத்தான சூழ்நிலையில் உள்ள 84 சூழலியல் பகுதிகளில் குறைந்தபட்ச பாதுகாப்பில் 13 பகுதிகள் மட்டுமே பராமரிக்கபடுகிறது. அதைப்போலவே ஆபத்தான பட்டியலில் உள்ள 1,937 உயிரினங்களின் பட்டியலில் எந்த பாதுகாப்புக்கும் உட்படுத்தப்படாமல் 129 உயிரினங்கள் உள்ளன என்பது ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இயற்கைக்கான உலகளாவிய நிதியம் காலநிலை தொடர்பான சர்வதேச இலக்கினை அடைய ஆஸ்திரேலியா உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று கூறியுள்ளது.