Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தானை பந்தாடியது ஆஸ்திரேலியா; தொடரில் முன்னிலை….!!

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. சிட்னியில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி மழையினால் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இன்று இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி கான்பராவில் தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. ஆனால் அது அவர்களுக்கு பலனலிக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர் ஃபக்கர் ஸமான் 2 ரன்களிலும், ஹாரிஸ் சோஹைல் 6 ரன்களிலும், ரிஸ்வான், ஆசிப் அலி ஆகிய முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

Image

மறுமுனையில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் கேப்டன் பாபர் அசாம் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் ஆறாவது விக்கெட்டுக்கு இணைந்த அஹ்மத் அதிரடியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சோதித்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தும் அசத்தினர். சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் 50 ரன்களிலும், அஹ்மத் 62 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை எடுத்தது.

அதனைத் தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபின்ச், வார்னார் ஆகியோர் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை தந்தளித்தனர். அதன்பின் வார்னர் 20 ரன்களிலும், ஃபின்ச் 17 ரன்களிலும் பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த ஸ்மித் பேட்டிங்கில் அதிரடியை காட்டினார்.

அரைசதமடித்த மகிழ்ச்சியில் ஸ்டீவ் ஸ்மித்

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்மித் சர்வதேச டி20 அரங்கில் தனது நான்கவது அரைசதத்தையும் பதிவு செய்து அசத்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 18.3 ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இறுதி வரை ஆட்டமிழக்காத ஸ்டீவ் ஸ்மித் 51 பந்துகளில் 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 80 ரன்களை குவித்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய ஸ்டீவ் ஸ்மித் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Categories

Tech |